மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றமா? எம்.பி.,க்கள் புகாருக்கு வெங்கையா மறுப்பு

0
112
எம்.பி.,க்கள் புகாருக்கு வெங்கையா மறுப்பு

புதுடில்லி: எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுவதாகவும், உரிய விவாதம் நடத்தாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதாகவும், ராஜ்யசபாவைச் சேர்ந்த, 15 எம்.பி.,க்கள் கூறியுள்ள புகார்களை, ராஜ்யசபா தலைவர், வெங்கையா நாயுடு மறுத்துள்ளார்.

 MP,எம்.பி.,புகார்,வெங்கையா,மறுப்பு

ராஜ்யசபா, எம்.பி.,க்களாக உள்ள, 14 கட்சிகளைச் சேர்ந்த, 15 பேர் ராஜ்யசபா தலைவராக உள்ள, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடுவுக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதிஉள்ளனர்.அதில், ‘ராஜ்யசபாவில், எதிர்க்கட்சிகளின் குரல் ஒடுக்கப்படுகிறது; விவாதங்கள் செய்யப்படாமலும், நிலைக்குழு அல்லது ஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பாமலும், மசோதாக்கள் வேகமாக நிறைவேற்றப்படுகின்றன’ என, அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

புள்ளி விபரம்

இந்தக் கடித விபரம், ஊடகங்களில் வெளியானது. இந்நிலையில், ராஜ்யசபாவில், நேற்று, கேள்வி நேரத்துக்குப் பிறகு, வெங்கையா நாயுடு கூறியதாவது:எம்.பி.,க்கள் எழுதியுள்ள இந்தக் கடிதம், ஊடகங்களில் வெளியானதால், பார்லிமென்ட் ஜனநாயகம் குறித்து தவறான கண்ணோட்டம் ஏற்பட காரணமாகி உள்ளது.கடந்த, 14, 15, 16 மற்றும் தற்போதைய லோக்சபாவின்போது, மசோதாக்கள், நிலைக் குழு மற்றும் ஆய்வுக் குழுவின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது தொடர்பான, சில புள்ளி விபரங்களை தெரிவித்துள்ளனர்.

லோக்சபாவில் முதலில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அவை பார்லி., குழுக்களுக்கு அனுப்பப்படாதது குறித்து இவர்கள் கேள்வி எழுப்பியிருந்ததால், அதற்கு ராஜ்யசபா தலைவராக, நான் பதிலளிக்க முடியாத நிலையில் உள்ளேன்.ராஜ்யசபாவில் கடந்த ஐந்து கூட்டத் தொடர்களை, நான் தலைவராக நடத்தியுள்ளேன். ராஜ்ய சபாவின், 244 முதல், 248வது கூட்டம் வரை, 10 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், எட்டு மசோதாக்கள், பார்லிமென்ட் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன. பழங்குடியினர் பிரிவில் மேலும் சில ஜாதிகளை இணைப்பது தொடர்பான மசோதா குறித்து ஆய்வு தேவையில்லை என்பதால், பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பவில்லை.

உறுதி

மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, ஏற்கனவே பார்லிமென்ட் குழு பரிசீலித்த பிறகு, லோக்சபாவில் நிறைவேறியதால், அதையும், பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பவில்லை.இதன் மூலம், பார்லிமென்ட் குழுக்களுக்கு அனுப்பாமல், அவசர அவசரமாக மசோதாக்கள் நிறைவேறியது என்று, எம்.பி.,க்கள் கூறியுள்ளது தவறு என்பது தெளிவாகிறது. நடப்பு கூட்டத் தொடரிலும், நான்கு மசோதாக்கள், முதலில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டன. அதில், மூன்று மசோதாக்கள் நிறைவேறியுள்ளன. இந்த மசோதாக்கள் ஏற்கனவே, பார்லிமென்ட் குழுவுக்கு அனுப்பப்பட்டவை.

திவால் சட்ட திருத்த மசோதா, இன்னும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. ராஜ்யசபா எந்த நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதோ, அதை நிறைவேற்றும் வகையில், நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். ராஜ்யசபா உறுப்பினர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளிக்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here