நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்: முன்ஜாமீன் கேட்டு மாணவர் உதித்சூர்யா மதுரை ஐகோர்ட்டில் மனு; விரைவில் விசாரணைக்கு வருகிறது

0
135

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக பதிவான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு, தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மதுரை,

சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, பிளஸ்-2 முடித்துவிட்டு மருத்துவ படிப்பில் சேர முடிவு செய்தார். ஆனால் நீட் தேர்வு எழுதுவதற்கும், கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்கும் வேறொருவரை அனுப்பிவிட்டு, மருத்துவ சீட் பெற்றது தொடர்பான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த அவர், கடந்த 45 நாட்களாக படிப்பை தொடர்ந்துள்ளார். அவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் மருத்துவ சீட் பெற்றதாக தேனி மருத்துவக்கல்லூரி டீனுக்கு புகார் வந்தது. அது குறித்து விசாரணை நடத்திய பின், போலீசில் புகார் செய்யப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மாணவர் உதித்சூர்யாவும், அவருடைய குடும்பத்தினரும் தலைமறைவாக உள்ளனர். சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் போலீசார் சோதனை நடத்தி, விசாரிக்கின்றனர்.

இந்தநிலையில் உதித் சூர்யா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், ‘கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதன்பின் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்று, தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தேன். சில நாட்கள் வகுப்புக்கு சென்றேன். எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், தொடர்ந்து வகுப்புக்கு செல்லவில்லை. கடந்த 12-ந்தேதி முதல் கல்லூரியில் இருந்து விலகிக்கொள்வதாக கல்லூரி நிர்வாகத்திடம் கடிதம் கொடுத்துவிட்டேன். இந்த நிலையில் நான் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக, சமீபத்தில் செய்திகள் வெளியானதை அறிந்தேன். இது முற்றிலும் தவறானது. என் மீது சுமத்தப்படும் இந்த குற்றச்சாட்டு, காழ்ப்புணர்ச்சி காரணமாக உருவாக்கப்பட்டுள்ளது. என் மீதான புகாரின்பேரில் தேனி கண்டமனூர் விலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். எந்த சம்பந்தமும் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த முன்ஜாமீன் மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here