கோடங்குடி கிராமத்தில் மண்ணில் புதைந்திருந்த சிவலிங்கம் கண்டெடுப்பு

0
99

கோடங்குடி கிராமத்தில் விவசாய நிலத்தில் புதைந்திருந்த சிவலிங்கத்தை கண்டெடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் நடராஜன்(வயது 55). விவசாயியான இவர் தனது நிலத்தில் தற்போது சோளம் பயிரிட்டுள்ளார். இதை சுற்றிலும் வேலிகள் இல்லாததால் ஆடு, மாடுகள் தொந்தரவு அதிகம் இருப்பதால் அதனை சுற்றி வேலி அமைக்க வேண்டி சுத்தம் செய்துள்ளார். அப்போது கரையான்புற்று இருந்த இடத்தை அகற்றியபோது அதில் பாறைகள் தென்பட்டுள்ளன. அதன் ஓரமாக தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் போல் தோன்றியதால் ஆச்சரியம் அடைந்த நடராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்குறிச்சி கிராமத்தில் சிவன் கோவில் குடமுழுக்கு திருவிழாவிற்கு வந்த சிவனடியார்களிடம் இதைப்பற்றி கூறியுள்ளார். அப்போது அங்கு வந்த அவர்கள் தாங்கள் வேறு ஆட்களை அனுப்பிவைக்கிறோம் என்று கூறி சென்றுவிட்டனர். இதன் பிறகு நேற்று முன்தினம் வந்த சிவனடியார்கள் லிங்கத்தை சுற்றிலும் குழி பறித்து பார்த்தபோது 2½ அடி உயரம் கொண்ட சிவலிங்கமும், அதன் அருகே நந்தி ஒன்று தலை உடைந்த நிலையிலும் இருந்தது.

வழிபாடு

அதனை வெளியே எடுத்து அருகாமையில் வைத்து அதற்கு அபிஷேகம் செய்து பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். இந்த செய்தி மளமளவென அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் காட்டுத்தீப்போல் பரவியது. இதனால் அருகில் உள்ள கிராம மக்களும் பலர் வந்து லிங்கத்தை பார்த்து வழிபட்டு செல்கின்றனர். மேலும் இது குறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், தனது தாத்தா நமது நிலத்தில் ஆவுடையப்பன் குடியிருக்கிறார். நாம் எப்போதும் நிலத்தை வணங்கிவிட்டு பயிர் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார். நான் அதை பொருட்படுத்தவில்லை தற்போது வேலி அமைப்பதற்காக கரையான் புற்றை அகற்றும்போது அதில் சிவலிங்கம் தென்பட்டது. எங்கள் கிராமத்தில் மாரியம்மன் கோவில் மட்டுமே உள்ளது. தற்போது ஆவுடையப்பன் சிவலிங்கம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here